search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை சேதம்"

    திண்டுக்கல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த கோம்பை சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து 10 -வது கிலோ மீட்டரில் உள்ளது அ.வெள்ளோடு, பூக்கள், திராட்சை, கீரை வகைகளுக்கு பெயர் பெற்ற ஊராகும். இன்றைக்கு தண்ணீர் இன்றி விவசாயம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

    இது ஒருபுறம் இருக்க விவசாயம் செழிப்புக்கு காரணமான மூலிகை மலையான சிறுமலை வெள்ளோட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் இதற்கு சிறப்பு. விவசாயத்திற்காக சிறுமலை கோம்பை பகுதியில் தோட்டங்களிலேயே வீடு கட்டி குடியிருப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் இணைந்து வெள்ளோட்டில் இருந்து கோம்பை பகுதிக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா சாலை போட்டனர்.

    இதன் பின்னர் ஒருமுறை இந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுபணி துறையினர், சுற்றுலா பயணிகள், கோம்பை பகுதி வாழ் பொது மக்களின் வாகனங்கள் என அதிகளவு சென்று வந்தது. இவை தவிர தனியார் பஸ் ஒன்று சென்று வந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து கோம்பைக்கு முழு நேர அரசு பஸ் ஒன்றும் இயக்கப்பட்டது.

    போக்குவரத்து அதிகமாகி போன நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்சாலை சேதமடைய தொடங்கியது. அப்போது இருந்து பொது மக்கள் சாலையை புதுப்பிக்க வேண்டும் என பல முறை மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். ஆனாலும் புதுப்பிக்கப்படவே இல்லை. இன்றைய நிலையில் இந்த கோம்பை பாத்திமா சாலை தான் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கந்தலாகி காட்சி தருகிறது.

    இந்த சாலையில் சென்று வரும் 2 பஸ்களும் டப்பா பஸ்களாக மாறி போனது. பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும், பஸ்சை ஓட்டும் டிரைவர்களுக்கும் மட்டுமே தெரியும் இந்த சாலையில் சென்று வரும் நிலை. இந்த சாலையில் இரு சக்கர வாகனம் முதல் பஸ், லாரி வரை சென்று வருவது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

    இவை தவிர கந்தலாகி போன சாலையில் பஸ் வரும் போது இரண்டு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதும் தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கந்தலாகி போய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த கோம்பை சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருப்பாயூரணியில் சாலையை சேதப்படுத்தி வேகத்தடை அமைத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.37.91 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.

    கருப்பாயூரணி பாரதிபுரம் பிரதான சாலை, சீமான் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை, தாசில்தார் நகர் விநாயகர் 1-வது தெருவில் ரூ.6.82 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை.

    பாண்டி கோவில் சுற்றுச் சாலை எல்காட் அருகில் ரூ.6.58 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மின்மோட்டார் அறை, சின்டெக்ஸ் தொட்டி மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ரூ.2.41 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கழிப்பறைகள் மராமத்து உள்ளிட்ட பணிகள் என மொத்தம் ரூ.37.91 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆணையாளர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.

    கருப்பாயூரணி பாரதி புரம் பிரதான சாலையில் குப்பைத் தொட்டியை சுற்றி குப்பைகளை கொட்டிய உணவகங்களுக்கு ரூ.1500 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

    சீமான் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் கட்டிட கழிவுகளையும், கட்டுமான பொருட்களையும் கொட்டி வைத்தவருக்கும், சாலையை சேதப்படுத்தி அனுமதி இல்லாமல் வேகத்தடை அமைத்த வீட்டின் உரிமையாளருக்கும் அபராதம் விதிக்க உத்தர விட்டார்.

    தாசில்தார் நகர் விநாயகர் பிரதான தெருவில் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் உடனடியாக பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அலுவலருக்கு ஆணையாளர் அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.

    மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் அம்ரூட் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற் பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் அருகே பல்லாங்குழியான சாலையை சீரமைக்ககோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வெள்ளோடு, யாகப்பன் பட்டி, கல்லுப்பட்டி, நரசிங்கபுரம் மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை இணைக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சாலை அமைக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் விளை பொருட்களை கொண்டு வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். மேலும் கிராம பகுதி மாணவ-மாணவிகளும் இந்த சாலை வழியாகத்தான் திண்டுக்கல் மற்றும் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    சாலை சீரமைப்பு பணி நடைபெறாததால் பல வருடங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.

    தற்போது சாலையின் பெரும் பகுதியில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டு பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் புலம் உள்ளது. மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இவர்கள் தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் மினி ஆட்டோக்களில் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர் வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலைகள் தற்போது சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். #tamilnews

    ×